ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீ பெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் ஆலயம்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள்.

ஸ்ரீ ராமானுஜர் கிபி 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும்,சாதி,மதங்களைக் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என் உயரிய கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திய மகான் ஸ்ரீ ராமானுஜர். ஸ்ரீ ராமானுஜரின் 1001வது அவதார தினம் கொண்டாடப்பட்டுள்ள இந்த சமயத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் ஆலயம் பற்றி அறிந்து கொள்வோம்.

புரட்சித்துறவி ஸ்ரீ ராமானுஜர்

திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளிடம் ஓம் நமோ நாராயணாயா என்று உபதேசம் பெற்று அதை அனைவரும் நன்மை பெற வேண்டி தான் நரகம் சென்றாலும் சரி என்று அனைவருக்கும் அந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோவில் மதிலின் மேல் ஏறி அனைவருக்கும் அருளியதால் எம்பெருமானார் எனப்படுகிறார்.

துறவிகளின் அரசர் என்பதால் யதிராஜர் என்றும் திருப்பாவையை எப்போதும் சிந்தித்த்ருந்ததால் திருப்பாவை ஜீயர் எனவும் போற்றப்படுகிறார்.

மூலவர் ராமானுஜர்

இத்தகைய பெருமைகளையுடைய ஸ்ரீ இராமனுஜர் அவதரித்த தலம் தான் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரும்புதூர். இங்கே மூலவராக ராமானுஜர் வீற்றிருக்கிறார். ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.

ஸ்ரீபெரும்புதூர் தல வரலாறு

ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை பார்த்து சிரித்தன. இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சபித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவமிருந்தனர்.

பூதங்கள் சாப விமோசனம்

இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது.

ராமானுஜர் சன்னதி

ஐந்து நிலை ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் காணலாம். துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து வணங்கிவிட்டு படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் ராமானுஜரின் சன்னதி அமைந்துள்ளது. சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புதமான அமைதியான திருமேனியை தரிசிக்கலாம். இரு கரம் கூப்பி நாம் வணங்கினால் நம்மையும் வணங்குகிறார் ராமானுஜர்.

அழகான தரிசனம்

யதிராஜரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன், ஆதிகேசவப் பெருமாளை தரிசனம் செய்யலாம். மூலவரின் திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும், பூதேவியும் குடியிருக்கின்றனர். மற்றும் உற்சவர் கேசவ நந்தவர்த்தனரையும், நவநீத கிருஷ்ணரையும், செல்லப்பிள்ளையும் தரிசனம் செய்யலாம்.

அடுத்து யதிராஜநாதவல்லி தாயாரை தரிசனம் செய்யலாம். தாயாரின் சன்னிதியின் அருகிலேயே சக்கரத்தாழ்வாரின் சன்னதி. மேலும் ஆண்டாள் நாச்சியாருக்கும், இராமருக்கும் தனி சன்னதி உள்ளது.

கோவிலை விட்டு வெளியே வந்தால் எதிரே இராமானுஜரின் அவதார திருத்தலத்தை காணலாம்.

இறைவனுக்கு தொண்டு

ஸ்ரீ ராமானுஜர் திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன், ராமாவதாரத்தில் ராமர் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்கின்றன புராணங்கள். அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.

சொர்க்கவாசல் தலம்

ராமானுஜர் அவதரித்ததால் இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அந்த நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை திறப்பர். வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள். இன்றைக்கும் ஸ்ரீபெரும்புதூரில் யார் இறந்தாலும் மேளம் அடித்துக்கொண்டு வந்து சுவாமிக்கு சூட்டப்பட்ட மாலை, ஆளவந்தார் கஷாயம், பரிவட்டம், பெற்றுச்சென்று இறந்தவர் உடலில் சாற்றுவர்.

ராகு கேது தோஷம் நீக்கும் தலம்

ஆதிசேஷனின் அம்சமான ராமானுஜரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாருகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும். சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊரின் நடுவே கோயில் அழகிய வடிவில் அமைந்துள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.