லட்டு, ஜிலேபி, அதிரசம்... எந்த ஸ்வீட்டில் எவ்வளவு கலோரி, யார் எவ்வளவு இனிப்பு சாப்பிடலாம் Deepavali

ண்டிகைகளில் மட்டுமல்ல... எந்தக் கொண்டாட்டத்திலும் தவறாமல் இடம் பிடிப்பது, அன்பைப் பகிர்ந்துகொள்தலின் அடையாளமாக இருப்பது, நம் வீட்டுச் சுட்டிக் குழந்தைகளின் `ஆல்டைம் ஃபேவரைட் ஆக இருப்பது ஸ்வீட்டுகள்தான்.  முன்பெல்லாம், பாட்டிகளின் கதைகளோடும், உறவுகளின் அன்போடும், உற்சாகத்தோடும் பண்டிகைக்கு முதல் வாரத்திலிருந்தே பலகாரங்கள் தடபுடலாகத் தயாராகத் தொடங்கிவிடும் . ஜீராவுக்குள் உல்லாசமாக நீந்தும் ஜாமூனைப் பார்த்தவுடன் நாவில் எச்சில் சுரக்கும்... இந்த ஓர் உதாரணம் போதும் நம் வீட்டு இனிப்புகளின் சுவையையும் மகத்துவத்தையும் அறிந்துகொள்ள! 

`உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு... என்று சின்னஞ் சிறுசுகள் பங்குபோடும் பாதாம் சேர்த்த லட்டும், பசும்பாலின் மணத்துடன் நெய்யில் குளித்துக்கொண்டிருக்கும் அல்வாவும் கேசரியும் சுவையின் உச்சத்துக்கு நம்மைக் கொண்டு செல்லும். ஆக, எந்தப் பண்டிகையாக இருந்தாலும் முதலிடம் வகிப்பவை இனிப்புகளே. ஆனால், அவற்றில் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் யாரும் அறிந்திருப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் சாப்பிடும் இனிப்புகளில் உள்ள கலோரி அளவுகளையும் அவற்றால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளையும் விளக்குகிறார் உணவியல் நிபுணர் மீனாட்சி. 

பண்டிகைக் காலங்களில் பத்து நாள்களுக்கு முன்னரே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிவிடும். தொடர்ந்து பத்து நாள்களுக்கு இனிப்பு சாப்பிடுவதால், அதன் சுவை நமது நாவில் ஒட்டிக்கொள்ளும். அடுத்த நாள் தன்னிச்சையாக அதே சுவையை நாக்கு தேட ஆரம்பிக்கும். இப்படி ஒரு தினசரி வழக்கமாகவே  இனிப்புச் சாப்பிடுவது நம்முடன் ஒட்டிக்கொண்டுவிடும். இப்படி ஒட்டிக்கொள்ளும் அந்த இனிப்புச் சாப்பிடும் பழக்கம் நமக்கு இலவசமாகத் தருவது உடல்நலப் பாதிப்புகளை. 

இனிப்பு ஆபத்தா?

நெய், எண்ணெய், வனஸ்பதி, மைதா, வெண்ணெய், கன்டன்ஸ்டு மில்க் எனக் கொழுப்பு நிறைந்த பொருள்களின் மூலம் செய்யப்படும் இனிப்புப் பலகாரங்களில் குறைந்தபட்சம் 75 கலோரி முதல் 250 கலோரி வரை இருக்கும். எந்த வகை இனிப்பாக இருந்தாலும், அதில் நிறைந்துள்ள கொழுப்பு நம் உடலில் சேரும்போது பிரச்னையே. உதாரணமாக, சர்க்கரை நோயாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு ஒரு வகை ஸ்வீட் சாப்பிடுகிறார் என்றால், அதிலிருந்து கிடைக்கும் அதிக கலோரியைச் சமன் செய்ய அவர் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொடர்ந்து இனிப்புகளைச் சாப்பிடுவது, உடலில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (கெட்டக் கொழுப்பு) அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மைதா மாவு, நெய், வெண்ணெய், வனஸ்பதி, எண்ணெய், சர்க்கரை, பால், பால்கோவா, கன்டன்ஸ்டு மில்க், டிரை ஃபுரூட்ஸ், பாதாம், பிஸ்தா ஆகியவையே இனிப்பில் கலோரி அதிகரிக்கக் காரணங்களாகும். 

யாருக்கு எவ்வளவு கலோரி தேவை?
சாதாரணமாக ஒரு மனிதரின் எடையில் ஒரு கிலோவுக்கு 30 கலோரி தேவை. உடலின் எடையைப் பொறுத்து கலோரியின் தேவையும் மாறுபடும். தோராயமாக, நாள் ஒன்றுக்கு ஒரு மனிதருக்கு 1,800 கலோரிகள் வரை தேவை. நம் உடலில் தேவைக்கும் அதிகமாக கலோரிகள் சேரும்போது உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, காலை இட்லி, தோசை என டிபனை ஒரு கட்டு கட்டிவிட்டு, மதியம், லஞ்சை மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டு விட்டு, மாலை நான்கைந்து லட்டை உள்ளே தள்ளினால் கலோரி எகிறிவிடும். அதனால் இனிப்புகளை மட்டுமின்றி சாப்பாட்டையும் திட்டமிட்டு சாப்பிடுவதும் அவசியம்.  

அதிக இனிப்பால் ஏற்படும் பிரச்னைகள்!

* இடுப்பைச் சுற்றியுள்ள தசைகள் கூடும். 

* பற்சிதைவு, பற்குழிகள், பல்வலி... எனப் பல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரலாம்.

* இனிப்பில் அதிகம் உள்ள ஃப்ரக்டோஸ் (Fructose), குளூக்கோஸ் போன்றவை கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

* இன்சுலின் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும். `டைப் 2 சர்க்கரைநோய், வளர்சிதைமாற்றக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும்.

* அதிக இனிப்புச் சுவையால் மூளையில் சுரக்கும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இவை உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும். 

* சிறுவர்களுக்கு ஏ.டி.ஹெச்.டி (ADHD) எனப்படும் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டரை ஏற்படுத்தும். பெரியவர்களுக்கு அல்சைமர் என்னும் மறதிநோயை உண்டாக்கும். 

* இனிப்பால் உடலில் சேரும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (கெட்டக் கொழுப்பு) அதிகரிப்பால் உடல்பருமன் வரலாம். அதிலும் குழந்தைப் பருவத்திலேயே உடல்பருமன் வருவதற்கான முக்கிய காரணம் அதிகமாகச் சாப்பிடும் இனிப்புகளே!