குரு ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம் பலன்கள், பரிகாரங்கள்

சென்னை: குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

தேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன

குரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. தனித்த குருவினால் பாதிப்பு ஏற்படும்.

லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, பத்து போன்ற வீடுகளில் இருக்கும்பொழுது சில விஷயங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும். குரு லக்னத்தில் இருப்பது பொதுவாக ஜாதகரை மிகப்பெரிய குழப்பமாகும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் படுவதால் பூர்வ புண்ணிய யோகம். 2ஆம் வீடான தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம் என்ற இந்த ஸ்தானத்தில் தனித்த குருவால் வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பார். பணத்தட்டுபாடு இருக்கும்.

5ஆம் வீட்டில் குரு இருப்பது காரகோ பாவ நாஸ்தி. குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம் ஏற்படும். 7ம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும். சுபகிரக ஆதிக்கம் உள்ள குருவிற்கு இங்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. இந்த இடத்தில் குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை போராட்டமாக அமையும். லக்னத்திற்கு பத்தாம் இடம் என்பது தசம கேந்திரம். வியாபார, தொழில், உத்யோக, ஜீவனஸ்தானத்தில் குரு தனித்து இருப்பதால் வியாபாரம், தொழிலில் நஷ்டம் ஏற்படும்.

குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக எதையும் அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். மேஷத்தில் குருவும் ராகுவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.

பணவரவிற்கு பஞ்சமிருக்காது.

ரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்.

கடகத்தில் குருவும் ராகுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.

கன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும். துலா ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆதரவு இருக்கும். விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் பல துறைகளில் வேலை பார்ப்பார்கள்.

மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோகா மாஸ்டர்களாக இருப்பார்கள். பழைய எதிரிகளை மறக்க மாட்டார்கள். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.