திருமண தடை, புத்திர தோஷம், மன அழுத்தம் தரும் கால சர்ப்ப தோஷம் பரிகாரங்கள்

சென்னை: எல்லாரும் கேட்டவுடன் சற்று பயப்படுகிற தோஷங்களில் ஒன்று நாக சர்ப தோஷம். இது குறித்த பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. கால சர்ப்ப தோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள். ஸ்ரீகாலஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் உள்ளிட்ட பல கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய சொல்வார்கள். நாக சர்ப தோஷம் என்றால் என்ன? அது கால சர்ப்ப யோகமாக எப்போது மாறும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்.

நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். ராகு, கேது இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கலாம்.

32 வயதிற்கு மேல் நன்மைகள்

லக்னம் எனப்படும் முதல் வீட்டில் ராகு இருக்க கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும்.

இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும். இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் அதற்கு குளிகை கால சர்ப்ப தோஷம் பொருளாதரப் பின்னடைவு ஏற்படும். 32வயதுக்கு மேல் நன்மைகள் உண்டு.

மன அழுத்தம் தரும் தோஷம்

ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இவர்கள் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும்.

நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேது இருந்தால் சங்கல்ப கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்களுக்கு வாசுகி கால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

புத்திர தோஷம் தரும் ராகு

ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. குழந்தை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுக்கூடும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆறாம் வீட்டில் ராகுவும் பன்னிரெண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது மஹா பத்ம கால சர்ப்ப தோஷம். அதிகாரம், பதவி அளித்து புகழின் உச்சிக்கு ஏற்றி விடுவது போல ஏற்றி விட்டு கீழே தள்ளி விடும்.

வாழ்க்கையே போராட்டம்

ஏழாம் வீட்டில் ராகுவின் லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம்.இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது. எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது கார்க்கேடக கால சர்ப்ப தோஷம். பூர்வீக சொத்துக்களால் இவருக்கு ஆபத்துக்கள் உண்டு. தந்தை வழி சொத்தினை அடைய ஆசைப்பட்டால் தவறாகி விடும்.

தொழில் செய்யும் இடத்தில் பிரச்சினை

ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சங்ககுட கால சர்ப்பதோஷம் ஏற்படும். இவர்களுக்கு சீரான ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு. 10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் ராகு இருந்தால் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அரசாங்க தண்டனையும் கிடைக்கும்.

கல்வி யோகம் தரும் சர்ப்ப தோஷம்

பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கும். பன்னிரெண்டாம் இடத்தில் ராகு மற்றும் ஆறாம் இடத்தில் கேது இருக்க இதனை ஷேஷ கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இவர்களுக்கு கல்வி யோகம் நிறைய இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு எதிரிகளும் அதிகமிருப்பார்கள்.

ராகு கேதுக்களுக்கு அர்ச்சனை

கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் தன்வந்த்ரி பீடத்தில் அஷ்ட கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். தோஷத்தின் வீரியம் குறைய தன்வந்த்ரி பீடத்தில் உள்ள அஷ்ட கருடாழ்வாருக்கு தேன் அபிஷேகம் செய்து கருட ஹோமமும் அர்ச்சனையும் செய்வது நல்லது. ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது வேண்டும். ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.