குரு, சுக்கிரன் எதிர் எதிர் துருவங்கள் சேர்ந்தால், என்னவெல்லம் நடக்கும் ஒரு ஜோதிடப்பார்வை Astrology

குருப் பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கும் வேளை இது. குரு பகவானின் அருளைப் பெறவேண்டி, அவருக்கு உரிய பரிகாரங்களை பலரும் செய்து வருகிறார்கள். குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். நவகிரகங்களில் பூரண சுப கிரகம் குரு. குருவுக்கு நிகரான மிகுந்த அதிர்ஷ்டமுள்ள சுப கிரகம் சுக்கிரன். ஜோதிட ரீதியாக தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிரன். இப்படி எதிரெதிர் துருவமாக இருக்கும் இவர்கள் ஒருவருடைய ஜாதகத்தில் தங்களின் பார்வை மற்றும் சேர்க்கையின் வழியாக என்னவிதமான பாதிப்பை உருவாக்குவார் என ஜோதிட நிபுணர் சூரிய நாராயண மூர்த்தியிடம் கேட்டோம். 

இவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த  வகையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒரு காந்தத்தின் வட துருவம், தென் துருவம் போல்  இவர்கள் மனித வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். இந்த இரண்டு துருவங்களும் ஒன்று சேராததைப் போல்,  குரு, சுக்கிரன் இருவருக்குமே ஜோதிட சாஸ்திரத்தில்  தனித்தனி தன்மைகள் உண்டு.


குரு,தேவர்களுக்கு  குருவாக இருக்கிறார். சுக்கிரன் அசுரர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர்.  குரு வேத மந்திரங்களுக்கு எல்லாம் உரியவர். சுக்கிரன் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் மாந்திரீக தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர்.
குருபகவான் மனித வாழ்க்கையில் திருமணம், புத்திர பாக்கியம், ஆஸ்தி, சொத்து சுகம், முன்னோர்கள் சொத்து, வீடு வாகன வசதிகள், கெளவரம், பங்காளி ஆதரவு, அரசு உதவி, அரசு சன்மானம், பதக்கம், நிலையான புகழ், அரசியல் வெற்றி, பொதுமக்கள் சேவை அனைவரும் விரும்பும் மனிதராக இருப்பது ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கிறார்.
சுக்கிரன் என்றாலே யோகம்தான். வறிய நிலையில் இருப்பவரைக்கூட மாட மாளிகையில் தங்க வைத்து மூன்று வேளையும் அறுசுவை உணவும் எந்த நேரமும் கையில் பணமும் இருக்கச் செய்வார். போதாக்குறைக்கு சேவை செய்ய ஆட்கள், சொகுசு வீடு, சொகுசு வாகனம், துன்பம் இல்லாத மனம், பெண்கள் மூலம் ஆதாயம், பெண்கள் ஆதரவு,  உல்லாச வாழ்வு, மது, மாமிச வேட்கை,  வைரம் ,வைடுரீயம் அணிதல், அரசனுக்கே உதவி செய்தல், ஊரே மெச்சும் அளவில் வாழ்தல் ஆகியவற்றுக்கு சுக்கிரன் காரகத்துவம் பெற்று பொறுப்பேற்கிறார்.
குரு நிற்கும் ராசிகளின் நிலைகள்:
குருவுக்கு சொந்த ராசியான மீனம், தனுசு ஆகிய வீடுகள் ஆட்சி நிலையில் இருந்தாலும், சந்திரனின் ஆட்சி ராசியான கடகத்தில்தான் உச்சம் அடைவார். மேலும் நட்பு கிரகமான சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் நட்பாகவும், செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிக ராசிகளில் நட்பாகவும் இருக்கிறார்.
புதன் ஆட்சி செய்யும் மிதுன ராசியில் பகையாகவும், கன்னி ராசியில் நட்பாகவும் உள்ளார் . தனக்கு சமமான சனி ஆட்சி செய்யும் கும்ப ராசியில் சமமாகவும், மகர ராசியில் நீசமாகவும் இருக்கிறார். தனக்கு பகையான சுக்கிரன் ஆட்சி செய்யும் ரிஷபம், துலாம் ராசியில் பகையாகவே  இருக்கிறார்.
சுக்கிரனின் சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருந்தாலும், தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம், கும்ப ராசிகளில் நட்பு நிலையிலும், புதனின் ராசியான மிதுனத்தில் நட்பாகவும், கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். 
தனக்கு சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிக ராசியில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார். தனக்கு நிகரான பலம் வாய்ந்த, ஆனால் பகை கொண்ட கிரகமான குரு, ஆட்சி செய்யும் தனுசு ராசியில் நட்பாகவும் மீனத்தில் உச்சமாகவும் இருக்கிறார். எதிரியின்  வீட்டில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான்.


 

குரு, சுக்கிரன் பார்வைகள்... பலன்கள்...
குருவுக்கு தான் நின்ற ராசியில் இருந்து 5, 7 மற்றும் 9 - ம் பார்வையாக பிற ராசிகளைப் பார்ப்பார். இதில் விசேஷப் பார்வையாக 5, 9 - ம் ராசியை பார்ப்பார். குருபார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இதன் பலனை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். 
சுக்கிரன், தான் நின்ற ராசியில் இருந்து 7 - ம் பார்வையாக பிற ராசியைப் பார்ப்பார். இந்த இரண்டு கிரகங்கள் பகையாக இருந்தாலும், இருவரும் ஓருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டால் உண்டாகும் பலன்களைப் பார்ப்போம். 

* குரு, ஆட்சி ( தனுசு, மீனம்), நட்பு (மேஷம், விருச்சிகம்), சமம் (சிம்மம், கும்பம்) ஆகிய ராசிகளில் நின்று 5, 9 -ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் பகை, நீசம் நிலையை அடைந்து இருந்தாலும், சுக்கிரன் தனக்குரிய சுப பலனைத் தருவதில் குறை வைப்பதில்லை.
* குரு, பகை ராசிகளான ( ரிஷபம், துலாம், மிதுனம்) நின்று 5, 9 - ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், அரை பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்
* குரு சமமான ராசியில் (கும்பம்) நின்று, 5, 9 - ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் சுக்கிரன் முக்கால் பங்கு சுப பலனைத் தருவார்.
* குரு நீச ராசியான மகரத்தில் நின்று 5, 9 ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். இதில் சுக்ரன் ஆட்சி, நட்பு  ராசியில் இருந்தால் சுக்கிரனே முழு சுப பலனையும் தந்து விடுவார்.
* இருவரும் 7- ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்ததுக் கொண்டால் இருவரும் எந்த ராசியில், எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள்.
பொதுவாக குரு, சுக்கிரன் பார்வை பெற்ற ஜாதகங்கள் தன் சுய உழைப்பால் கடவுள் அனுகிரகத்தால் பல உயர்வுகள் பெற்று நல்ல வாழ்க்கை அமைகிறது. 


குரு சுக்கிரன் சேர்க்கையின் பலன்கள்!

ஜோதிட சாஸ்திரத்தில் பகையாக இருக்கும் குருவும் சுக்கிரனும் சேர்ந்து ஓரே ராசியில் இருந்தால், என்ன பலன்கள் நடக்கும் என்பதைப் பார்ப்போம்
* குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், சுப பலனை தருகிறார்
* குருவும் சுக்கிரனும் 5, 9, 11-ம் இடங்களில் நின்று இருந்தால் அவரவர் உரிய சுப பலனைத் தருவார்கள்.
* குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை.