இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் அ.தி.மு.க அதிரடி வியூகம்!

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (27/03/2019)

கடைசி தொடர்பு:11:25 (27/03/2019)

ஆளும்கட்சியாக உள்ள அ.தி.மு.க, தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால், நடைபெற உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

தேர்தல் என்றாலே தமிழக வாக்காளர்களுக்குக் கொண்டாட்டம் என்கிற நிலையைத் தமிழக அரசியல் கட்சிகள் ஏற்படுத்திவிட்டன. அதிலும் இடைத்தேர்தல் என்றால் சொல்லவா வேண்டும். தற்போது ஆளும்கட்சியாக உள்ள அ.தி.மு.க, தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றால், நடைபெற உள்ள 18 தொகுதி இடைத்தேர்தலில் எட்டுத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதி மக்களுக்கும் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்கிறார்கள் ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்கள். 

தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றோடு நிறைவடைந்துள்ளது. மேலும், தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க கூட்டணியும் தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க தரப்பு கூடுதலாக 18 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-வை விட கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. இதற்காக மைக்ரோ லெவலில் அ.தி.மு.க தரப்பு வேலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க தரப்பு, “அ.தி.மு.க தரப்புக்கு நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியமானது இந்த இடைத்தேர்தல். எனவே, இதுகுறித்து அ.தி.மு.க தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக எட்டு தொகுதிகளில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்குக் கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அமைச்சர்களும்  தீவிரமாகத் தேர்தல் வேலையில் ஈடுபட்டுவருகிறார்கள். என்னதான் சாதனைகள், இரட்டை இலை சின்னம், அம்மாவின் அரசு என்று சொன்னாலும் அ.தி.மு.க மீது மக்களிடம் ஓர் எதிர்ப்பு அலை இருப்பதை உணரமுடிகிறது. எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், கரன்சியைத் தவிர இப்போது வேறு வழியில்லை. சத்தியத்துக்கு கட்டுப்பட்டதுபோல, கரன்சிக்கு வாக்காளர்கள் கட்டுப்பட்டுவிடுவார்கள் என்று தலைமை கணக்குப் போட்டது. இந்தக் கணக்கை ஒரு மாதத்துக்கு முன்பே போட்டுவிட்டது. அதன் ஒரு பகுதியாக, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ரேஷன் கார்டுகளை ஏற்கெனவே கணக்கெடுத்துவிட்டார்கள். 


இந்தத் தொகுதிகளில் ஓட்டுக்குப் பணம் என்கிற பாலிசியை மாற்ற முடிவுசெய்துள்ளோம். அதற்குப் பதிலாக ஒரு குடும்ப அட்டைக்கு இவ்வளவு என்று பணப் பட்டுவாடாவை நடத்த உள்ளோம். ஒவ்வொரு நபரையும்விட, ஒரு குடும்பத்துக்கு பணம் என்பதை எளிதாகக் கொடுத்துவிடலாம். இதற்காக பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் குடும்ப அட்டை விவரத்தைக் கொடுக்க உள்ளோம். குடும்பத் தலைவரை தனித்தனியாகச் சந்தித்து, அந்தக் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களுக்கு மொத்தமாக பணத்தைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 3,000 முதல் 5,000 ரூபாய் வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும்  பணம் வழங்கும் வாய்ப்புள்ளது. இந்தப் பணிகள் விரைவில் நடக்கும். இதைத் தவிர,  பூத் கமிட்டியில் இருப்பவர்கள் மூலம் பிரசாரத்துக்கு வரும் நபர்களுக்கு, தனித்தனியாகப் பணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வகையில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள மக்களுக்குப் பல வழிகளில் பண மழை பொழியப்போகிறது. ஐந்தாயிரம் ரூபாய் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் உறுதியான தொகை. அதைத் தாண்டி வேட்பாளர்கள் தங்கள் பொறுப்பில் செலவு செய்யும் தொகை தனி. இதனால், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது” என்கிறார்கள்.

ஆளும்கட்சியின் இந்த கரன்சி யுக்தியை அறிந்த எதிர்க்கட்சியான தி.மு.க-வும், என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்துவருகிறது. குறிப்பாக, ஆளும்கட்சி அளவுக்கு பணத்தைத் தங்களால் அளிக்க முடியாது என்பதால், அவர்கள் பணம் வழங்குவதை முடிந்த அளவு தடுப்பதற்கான வேலைகளில் தீவரம் காட்ட வேண்டும் என தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளதாம். என்ன நடக்கப்போகிறது இடைத்தேர்தலில் என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க