சென்னை கொடுங்கையூர், பெருங்குடி... குப்பை மலைகளுக்கு அருகில் ஒரு சாபக்கேடான வாழ்க்கை!

சென்னையின் குப்பைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டப்பட்டு, மொத்தமாகச் சேர்ந்து சிறு சிறு குன்றுகளாக மாறி நிற்கின்றன. அந்தப் பகுதிக்குள் நுழைந்தாலே இன்னவென்று சொல்ல முடியாத கடும் துர்நாற்றம் வீசுகிறது; நன்கு ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே மூச்சுத்திணறல் ஏற்படுத்துகிற மாதிரி காற்றில் அத்தனை இறுக்கம்; உடனே அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்பது மாதிரி ஓர் அசெளகர்ய உணர்வு ஏற்படுகிறது.... 30 ஆண்டுகளாக அங்கேயே வசிக்கும் மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மாநகரத்தின் ஒட்டுமொத்த திடக்கழிவுகளும் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகளில்தான் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

வட சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 270 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 2,100 முதல் 2,300 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதேபோல பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியிலிருக்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கு, 1988-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. இதன் பரபரப்பளவு 228 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 2,200 முதல் 2,400 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்தக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளால் அந்தப் பகுதிகளில் ஏற்படும் முதல் பிரச்னை... கடுமையான துர்நாற்றம். மனிதர்களால் தாங்கவே முடியாத துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டுதான் அதற்கு அருகிலேயே வசிக்கிறார்கள் மக்கள். இவர்களுக்கு இந்தக் குப்பைக் கிடங்கால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று போன்ற பிரச்னைகள் சர்வ சாதாரணமாக ஏற்படுகின்றன. பெருகியிருக்கும் ஈக்கள், கொசுக்கள், எலிகள் மூலமாகத்தான் விதவிதமான தொற்றுநோய்களும் பரவுகின்றன.

இந்த பூமியில் அரிதான நிலப்பகுதி நன்னீர் சதுப்பு நிலம். பாதுகாக்கப்படவேண்டிய நிலப்பகுதிகளில் சதுப்பு நிலமும் ஒன்று. பல்லுயிர் வளரும் இதை `அலையாத்தி காடுகள்’ என்று சொல்வார்கள். பள்ளிக்கரணை அப்படிப்பட்ட சதுப்பு நிலப் பகுதி. இந்த அரிய நிலப்பகுதியை குப்பைக் கிடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று, பாழ்படுத்திக்கொண்டிருக்கிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சி என்னென்னவிதமான கழிவுகள், எவ்வளவு சதவிகிதம் கொட்டப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது. அதன்படி...
* உணவுக் கழிவுகள் - 8 சதவிகிதம்
 * பசுமைக் கழிவுகள் - 32.25 சதவிகிதம்
* மரக் கழிவுகள் - 6.99 சதவிகிதம்
* பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் - 5.86 சதவிகிதம்
* தொழிற்சாலைக் கழிவுகள் - 1.18 சதவிகிதம்
* உலோகக் கழிவுகள் - 0.03 சதவிகிதம்
* துணிக் கழிவுகள் - 3.14 சதவிகிதம்
* காகிதக் கழிவுகள் - 6.45 சதவிகிதம்
* ரப்பர் மற்றும் தோல் கழிவுகள் - 1.45 சதவிகிதம்
* கட்டடக் கழிவுகள் - 34.65 சதவிகிதம்

கொடுங்கையூர் குப்பைக் கிடங்குக்கு எதிரில், 100 அடிக்கும் குறைவான தூரத்திலேயே இருக்கிறது வீட்டு வசதி வாரியக் குடியுருப்புப் பகுதி. அங்கே வசிக்கும் ஒருவர் சொல்கிறார். ``24 மணி நேரமும் கெட்ட நாத்தத்தை சுவாசிச்சுக்கிட்டேதான் வாழவேண்டியிருக்கு. ராத்திரியில கொசுத் தொல்லை, பகல்ல ஈ தொல்லை. எங்களுக்கு இது சாபக்கேடான வாழ்க்கை. மாசா மாசம் உடம்பு சரியில்லாமப் போயிடுது. உடம்பு சரியில்லைன்னா, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குப் போவோம்; ஊசி போடுவாங்க, மாத்திரைகள் கொடுப்பாங்க; ஆனா அடுத்த மாசமே மறுபடியும் ஏதாவது பிரச்னை வந்துடும். குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல்னு எப்பவும் ஏதாவது வந்துக்கிட்டே இருக்கு. சம்பாதிக்கிற  பணத்துல பாதிக்குமேல ஆஸ்பத்திரிக்கே சரியாப் போகுது. கொசுக்கடியால சரியான தூக்கமில்லை, சருமத்துல ஏதாவது பாதிப்பு வந்துடுது, மூச்சுவிடுறது சிக்கலாகிடுது, இன்னும் ஆஸ்துமா, டி.பி-னு என்னென்னவோ நோய்களால அவதிப்படுறோம். இங்கே மாநகராட்சிக்காரங்க வந்து கொசு மருந்து அடிச்சே ஆறு மாசம் இருக்கும். எத்தனையோ தடவை போய் சொல்லிட்டோம்... ஆனாலும் மருந்து அடிக்க மாட்டேங்கிறாங்க...’’ - நீள்கிறது அவரின் வேதனைக் குமுறல். 

சற்று தூரத்தில் 50 வயதான ஓர் அம்மா நிதானமில்லாமல், முகமெல்லாம் வீக்கத்தோடு படுத்திருந்தார். என்னவென்று விசாரித்தோம், ``இந்த அம்மா ஒரு வருசத்துக்கு முன்னாடி நல்லாத்தான் இருந்தாங்க. என்ன பிரச்னைன்னே தெரியலை. திடீர்னு முகம், கை, காலெல்லாம் வீங்கிக்கும். இவங்களுக்கு எழுந்து நிக்கறதுக்கே தெம்பு இல்லாமப் போச்சு. டாக்டர்கிட்டப் போனா, ஊசி போடுவாங்க, மாத்திரை கொடுப்பாங்க. அவ்வளவுதான். பிரச்னை என்னன்னு விளக்கமா சொல்ல மாட்டாங்க. ஒரு வாரம் நல்லாயிருப்பாங்க. அப்புறம் மறுபடியும் கை, கால் வீங்கிக்கும்...’’ என்கிறார் ஒருவர். அவர் சொன்னதைப் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அந்த அம்மா.

பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால், உடல்நல பாதிப்புகள் மட்டுமல்ல...  நிலத்தடி நீரும் அந்தப் பகுதிகளில் மிக மோசமாக மாசடைந்து வருவதாகச் சொல்கிறார்  சமூக செயற்பாட்டாளர் உதய் ராஜ்... ``பெரிய குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளில் இருக்கும் வேதிப் பொருள்கள், கரிமப் பொருள்கள், மழைநீருடன் கலந்து, கீழே வடியும்போது கறுப்பு நிறத்தில் இருக்கும். அதை `லீச்சேட்’ (Leachate) என்று சொல்வார்கள். இந்த நீர், நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்து இருக்கிறது. அந்த நீரை எடுத்துச் சோதனை செய்ததில் உலோகத் துகள்கள், ஆர்சனிக் போன்ற உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் கலந்திருக்கின்றன. சதுப்புநிலம் என்பதால், இந்த பாதிப்பு பள்ளிக்கரணைப் பகுதியில் மிக அதிகமாக இருக்கும். குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து தனியார் அமைப்புகள் இப்போதுதான் ஆய்வுகள் நடத்திவருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகுதான், எவ்வளவு பேர், என்னென்ன உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.’’ 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான `பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜனிடம் பேசினோம்... ``கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கிடங்குகள் இப்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருக்கும் பிளாஸ்டிக், அழுகிய பொருள்கள் என அனைத்தும் சேர்ந்து அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் முழுவதும் மாசடைந்துவிட்டது. அந்தக் குப்பைகளை எரிக்கும்போது, அதிலிருக்கும் பிளாஸ்டிக்கும் சேர்ந்து எரிந்து வெளிவரும் புகையால் அந்தப் பகுதி மக்களுக்கு தோல் வியாதிகள், நுரையீரல் பாதிப்புகள், சுவாசக் கோளாறுகள், புற்றுநோய்கூட ஏற்படுகின்றன.

குப்பைகளைக் கையாள்வதில் தமிழக அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. வீடுகளிலிருந்தோ மற்ற இடங்களிலிருந்தோ குப்பைகள் எடுக்கும்போது, `மக்கும் குப்பை’, `மக்காத குப்பை’ எனப் பிரிக்க (Source Segregation) இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதை அவர்கள் முன்னெடுக்கவே இல்லை. பிளாஸ்டிக், பேட்டரிகள், மின்னணு சாதனக் கழிவுகள், அழுகிய காய்கறிகள்... என அனைத்துக் குப்பைகளும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் கொட்டப்படுகின்றன. குப்பைக் கிடங்குகளை அகற்றக் கோரி கொடுங்கையூர், பெருங்குடிப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆனால், அரசு இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை. 

பெருங்குடி குப்பைமேடு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் இருக்கிறது. அங்கே குப்பைகளைக் கொட்டுவது அநியாயத்தின் உச்சம். சதுப்புநிலம் என்பது ஓர் உயிர்ச்சூழல். பல்லுயிர்கள் வாழும் பகுதி. அரிதாக இருக்கும் நன்னீர் சதுப்புநிலம். மழை, வெள்ள நீரைத் தேக்கிவைக்கும் இடம். இந்தப் பகுதி மற்ற இடங்களைவிட, பத்து மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. இந்தக் குப்பைக் கிடங்கால், அந்தப் பகுதியின் நிலப்பரப்பும், நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்திருக்கின்றன. இயற்கையின் கொடையான அந்த சதுப்புநிலப் பகுதியை எதற்கும் லாயகற்றதாக மாற்றிவிட்டார்கள். `லீச்சேட்’ கலந்த நிலத்தடி நீரைக் குடித்தால் புற்றுநோய் வரவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் இந்த லீச்சேட்டில் மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடு, கரிம வேதிப் பொருள்கள், ஆல்கஹால், ஆல்டிஹைடு என்று பல நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப் பொருள்கள் இருக்கின்றன. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உயிரையே பறிக்கும் நோய்கள் வரக்கூட வாய்ப்பிருக்கிறது. அந்தப் பகுதி மக்களை ஆய்வுக்குள்ளாக்கினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

குப்பைகளில் கொட்டப்படும் `ஃப்ளோரசன்ட்’ பல்புகளிலிருக்கும் பாதரசத்தின் ஆவியை சுவாசித்தால், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும். இந்தக் கிடங்குகளிலிருந்து வெளிவரும் `கிரீன்ஹவுஸ்’ வாயுக்கள், கார்பன் டை ஆக்ஸைடைவிட இருபது மடங்கு அதிக நச்சுத் தன்மை கொண்டவை. இதைச் சுவாசிக்கும் மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்புகள், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உலகின் பிளாஸ்டிக் கழிவுகளில் ஒன்பது சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 91 சதவிகிதம் மற்ற கழிவுகளுடன் சேர்ந்து கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.

பெருங்குடி குப்பைக் கிடங்கு இருக்கும்வரை, தென் சென்னைப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இதற்குக் காரணமும் சதுப்புநிலப் பகுதியிலிருக்கும் குப்பை கிடங்குதான். அந்த இடத்தில் இவ்வளவு பெரிய குப்பைக் கிடங்கு இருப்பதால், தண்ணீர் நிலத்தில் பரவி, உறிஞ்சப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனாலேயே அந்தப் பகுதியில் வெள்ளம் வந்தால் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும், அரசு குப்பை மேலாண்மையைச் சரிவர செய்யாததே காரணம்’’ என்கிறார் சுந்தரராஜன்.

குப்பைக் கிடங்குகளில் கள ஆய்வு செய்த சமூகச் செயற்பாட்டாளர் ஹேரிஸ் சுல்தானிடம் பேசினோம். ``கடந்த 8.4.2016-ல் மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மைச் சட்டம் கொண்டுவந்தது. அதில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தில், `பெரிய நிறுவனங்கள் தங்களது பொருள்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் அடைத்து விற்பனை செய்தால், அந்த பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் சேகரித்து, அவற்றை  மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஆறு மாதங்களுக்குள் செய்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், எந்த நிறுவனமும் இதை நடைமுறைப்படுத்தவில்லை. பெருங்குடி, கொடுங்கையூர் மட்டுமில்லாமல் சிட்லப்பாக்கம், பல்லாவரம் ஏரிகளில் கொட்டப்பட்டுவரும் குப்பைகளை ஆய்வு செய்ததில், பெரிய நிறுவனங்களின் பிளாஸ்டிக் குப்பைகள்தான் அவற்றில் அதிகமாக இருந்தன. சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அதை யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய நகரங்களிலேயே, இந்தச் சட்டத்தை அமல்படுத்தாதது சென்னையாகத்தான் இருக்கும்’’ என்று வேதனையுடன் கூறுகிறார்.

குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுநல மருத்துவர் எழிலன் கூறுகிறார்... ``ஈக்கள் மற்றும் சிறு பூச்சிகள் பரப்பும் கிருமிகளால் பரவும் தொற்றுநோய்களான காலரா, வயிற்றுப்போக்கு, அமீபியாஸ் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. குடிநீரில் குப்பைக் கழிவுநீர் கலப்பதால், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் போன்ற வாயுக்களால், நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக் கோளாறுகள் உண்டாகும். குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஐ.எல்.டி (ILD - Interstitial Lung Disease) - நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு வரலாம். நான் அந்தப் பகுதியில் மூன்று முறை ஆய்வு செய்திருக்கிறேன். அங்கே வசிக்கும் மக்கள் கிருமிகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். மற்ற இடங்களில் பெரும்பாலும் இதுபோன்ற நோய்கள் பரவுவது இல்லை.

இங்கே வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சருமப் பிரச்னைகள் இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசிக்கும், அந்தப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு மீத்தேன், சல்பர் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ரத்தக்குழாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய்கள் ஏற்படலாம். ஆனால், அங்கே இதற்கான முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. வெளிநாடாக இருந்தால், அந்தப் பகுதி மக்களை பத்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் வசிப்பவர்கள் என்று பிரித்து முறையாக ஆய்வு நடத்தி, கண்டுபிடித்து அதைச் சரி செய்திருப்பார்கள். அரசுதான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்ற &