நிலாவில் நடந்த 4வது விண்வெளி வீரர் ஆலன் பீன்.. உடல்நலக்குறைவால் மரணம்

வாஷிங்டன்: சந்திரனில் நடந்த நாலாவது விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஆலன் பீன் உடல்நலக் குறைவால் காலமானார்.

அமெரிக்க கடற்படை சோதனை ஓட்ட விமானத்தின் விமானி ஆக இருந்தவர் ஆலன் பீன்(86). 1963-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா’வில் இவர் பணிக்குச் சேர்ந்தார்.

அதன் தொடர்ச்சியாக இரண்டு முறை விண்வெளிக்குப் பயணம் செய்த ஆலன், கடந்த 1969ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி சந்திரனில் இறங்கி நடந்தார். இதன் மூலம் சந்திரனில் நடந்த 4வது விண்வெளி வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.

முதன்முதலில் சந்திரனில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளிக்குச் சென்று திரும்பிய நான்கு மாதங்கள் கழித்து இவர், அப்பல்லோ விண்கலம் மூலம் நான்கு பேர் கொண்ட குழுவுடன் சந்திரனுக்கு சென்றார்.

மேலும், சந்திரனில் தரை இறங்கி நடந்த ஆலன், அங்கு 32 அங்குலம் தோண்டி பாறைகள், தாதுக்கள் மற்றும் தூசிகளை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஆலன், சிகிச்சைக்காக ஹீஸ்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

ஆலனின் இந்த மரணச் செய்தியை நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.