பெத்த தாய்ன்னா இப்படி செய்வார்களா’ ஆந்திரக் கும்பலை வளைத்த பயணிகள்!

Erode: 

உடலெல்லாம் கொப்புளமாக, அரை மயக்கத்தில் கிடந்த பச்சிளங் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு பிச்சையெடுத்த பெண்மணியை சுத்தி வளைத்த பயணிகள், அந்தப் பெண்மணியை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வெளுத்து வாங்குகிறது. பெரியவர்களாலேயே மதிய நேர வெயிலில் வெளியே சென்று வரமுடியவில்லை. இந்த நிலையில், இன்று ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்மணி ஒருவர் தன்னுடைய தோளில் சுமார் ஒரு வயதான பச்சிளங் குழந்தையை வைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தையின் உடலில் அம்மை போட்டது போல உடலெல்லாம் கொப்புளமாகக் கிடந்தது. இதனைப் பார்த்து கோபமடைந்த பயணிகள், ‘உன் மேல் சந்தேகமாக இருக்கு. இது உன் குழந்தை தானா? குழந்தை உடம்புல இவ்ளோ கொப்புளமா இருக்கு. அதை வச்சிக்கிட்டு இப்படி வெயில்ல திரியுற...பெத்த தாய்ன்னா இப்படி செய்வாளா’ என அந்தப் பெண்மணியை சத்தம்போட்டு பேருந்து நிலையத்தில் இருந்த போலீஸாரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

மேலும், இதேபோல 4-5  பெண்மணிகள் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுக்க, அவர்களைப் பயணிகள் வளைக்க முற்பட்டனர். ஆனால், அந்தப் பெண்மணிகள் பேருந்தில் ஏறித் தப்பித்து விட்டனர். அந்தப் பெண்மணியை விசாரித்த போலீஸார், ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து குழந்தையைச் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து விவரமறிந்தவர்கள் சிலர் கூறுகையில், ‘ஈரோடு கோனவாய்க்கால் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 20 பெண்மணிகள் தங்கியுள்ளனர். அவர்களுக்குக் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுப்பது தான் தொழில். இந்தப் பெண்மணிகளுக்கு பச்சிளம் குழந்தைகளை வாடகைக்கு விடுவதற்கென கேங் ஒன்று இருக்கிறது. அது எப்படி இதுமாதிரி வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்களின் கையில் எப்போதுமே பச்சிளம் குழந்தைகளே இருக்கின்றது. அந்தக் குழந்தைகள் வளரவே வளராதா? எனவே, போலீஸார் அவர்களை விசாரித்து, அந்தக் குழந்தைகள் உண்மையாகவே அவர்களுடையது தானா என விசாரிக்க வேண்டும்” என்றனர்.