வெள்ள சேதத்தைப் பார்வையிட நாளை கேரளா செல்கிறார் பிரதமர்  மோடி

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர். இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு மாயமானோரின் உடல்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ``கேரளாவில் துயரமான சூழ்நிலை நிலவுகிறது..." என்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேதனைத் தெரிவித்துள்ளார். 

கேரள வெள்ளத்தில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தோருக்கு உதவிட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் உதவி வருகின்றனர். இந்தச் சூழலில், வெள்ள சேதத்தைப் பார்வையிட நாளைக் கேரளா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தனி விமானம் மூலம் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிட்டு, பின்னர் அவர் வெள்ளச் சேதம் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேற்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார். இதனையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. வாஜ்பாயின் உடல் புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கவுள்ளது. இதில் மோடி பங்கேற்பார். இதனை அடுத்து அவர் நாளைக் கேரளாவுக்கு செல்வார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.