”தமிழகம் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது” முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

மதுரை காளவாசல் பகுதியில் ரூ.54.7 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டித்  தொடங்கி வைத்தனர். 

மதுரை மாநகரில் போக்குவரத்து நிறைந்த காளவாசல் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல். ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,  "மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் பகுதியால்  புதிய மேம்பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .இந்தத்  திட்டத்தில் மறுசீராய்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

எம். ஜி.ஆர், பேருந்து நிலையம் முதல் கூடல் நகர் வானொலி நிலையம் பகுதி வரை நான்கு வழி இணைப்பு சாலை அமைக்கப்படவுள்ளது. மேலும் குருவிக்காரன் சாலைப்  பாலம் முதல் அண்ணா நகர் வரை சாலை மேம்படுத்தப்படும். வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில்  சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் ஆற்றில் விடப்படும்,  இதனால் வைகை ஆறு பாதுகாக்கப்படும் . தமிழகத்தில் எல்லாத்துறைகளும் தற்போது வளர்ச்சியை நோக்கிச்  சென்றுகொண்டிருக்கிறது" என்று பெருமையுடன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டார். சர்ச்சைக்குரிய பைனான்சியர்  முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது .