டைவரை உயிரோடு விழுங்கி உமிழ்ந்த திமிங்கிலம்... நிஜ `குடையும் குப்புசாமியும்’ கதை!

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (12/03/2019)

கடைசி தொடர்பு:19:10 (12/03/2019)

``திடீரென எல்லாம் இருட்டாகிவிட்டது, என் இடுப்பைச் சுற்றி அழுத்தம் ஒன்றை உணர்ந்தேன். உடனே நடந்தது என்னவென்பது எனக்கு புரிந்துவிட்டது. தெரியாமல் மீன்களுடன் என்னையும் விழுங்க முயற்சி செய்துள்ளது அந்தத் திமிங்கிலம்.’’

சிறுவயதில் நாம் படித்த கதைகளில் தமிழ்ப் பாடப்புத்தகத்தில் படித்த `குடையும் குப்புசாமியும்’ கதை இன்னும் பலருக்கும் மறந்திருக்காது. ஆல மரத்தடியில் உட்கார்ந்து சுண்டல் சாப்பிட முற்படும் குப்புசாமியைத் திடீரென பெய்த மழையால் உருவாகும் வெள்ளம் குடையோடு அடித்துச்செல்லும். அப்படி கடல்வரை செல்லும் குப்புசாமி திமிங்கிலத்தின் வாயினுள் சென்றுவிடுவார். பின்பு வயிற்றில் ஓங்கி உதைத்ததும் திமிங்கிலம் அவரை வெளியே `ப்பூ’ என உமிழ்ந்துவிடும். பின்பு குடையுடன் தரையிறங்கி இறுதியாகத் தான் சாப்பிட முற்பட்ட சுண்டலை சாப்பிடத் தொடங்குவார். இந்த வேடிக்கையான கதை குழந்தைகளை மிகவும் குதூகலப்படுத்திய கதைகளில் ஒன்று. பைபிளிலும் திமிங்கிலத்தின் வயிற்றில் ஜோனா என்னும் தீர்க்கதரிசி 3 நாள்கள் கழித்ததாக ஒரு கதை இருக்கும். இப்படிக் கதைகளில் மட்டும் கேள்விப்பட்ட நிகழ்வு இப்போது உண்மையில் நிகழ்ந்துள்ளது. 

ரெய்னர் சிம்ஃப் என்பவர் கடலின் நடுவில் சுறா மீன்கள் மற்றும் திமிங்கிலங்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு எல்லாம் இருட்டாக ஆகியிருக்கிறது. பின்புதான் ஒரு திமிங்கிலத்துக்குள் தான் இருப்பதை உணர்ந்திருக்கிறார். ஆனால், இவர் 3 நாள்கள் எல்லாம் கழிக்கவில்லை. சில விநாடிகளில் வெளியே வந்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 51 வயதான சிம்ஃப் 15 வருடங்களுக்கும் மேலாக டைவ் டூர் ஆபரேட்டராகவும் கடல்வாழ் ஆர்வலராகவும் இருந்துவருகிறார். வருடா வருடம் தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கடல் பகுதிகளில் சார்டைன் (சாலைமீன்) எனப்படும் மீன்கள் முட்டையிடுவதற்காக அதிக அளவில் ஒன்று சேரும். இப்படி ஒன்று சேரும் மீன் கூட்டங்கள் 7 கிலோமீட்டர்வரை நீளமாகவும் 1.5 கிலோ மீட்டர்வரை வரை அகலமாகவும் இருக்கும். இப்படி ஒன்று கூடுவதால் அனைத்துப் பெரிய மீன்களும் இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு உணவுக்காக இங்கு வரும். தனியாக இருந்தால் சிக்கிக்கொள்வோம் என்பதை அறிந்த இந்த மீன்கள், கூட்டமாக பெரிய மீன்கள் வருவதைக் கண்டு அங்கும் இங்கும் நகரும். இதை `சார்டைன் ரன்’ (Sardine run) என அழைப்பர். வியப்பூட்டும் இந்தக் காட்சிகளை எல்லா ஆண்டையும் போல் இந்த ஆண்டும் படம்பிடிக்கச் சென்றிருக்கிறார் சிம்ஃப்.

அப்போது பிரிட்ஸ் என்னும் வகையிலான திமிங்கிலம் சிறிய மீன்களுடன் இவரையும் தன் வாயில் பிடித்துள்ளது. திடீரென அனைத்தும் இருளான இவர் சில விநாடிகளில் மீண்டும் வெளியே வந்திருக்கிறார். தப்பி வந்த அவர் பேசுகையில், ``திடீரென எல்லாம் இருட்டாகிவிட்டன, என் இடுப்பைச் சுற்றி அழுத்தம் ஒன்றை உணர்ந்தேன். உடனே நடந்தது என்ன என்பது எனக்குப் புரிந்துவிட்டது. தெரியாமல் மீன்களுடன் என்னையும் விழுங்க முயற்சி செய்துள்ளது அந்தத் திமிங்கிலம். பின்பு, தவறு நடந்துவிட்டது என உணர்ந்த திமிங்கிலம் தன் வயிற்றில் இருந்த மொத்த டன் கணக்கான தண்ணீருடன் என்னையும் வெளியே விட்டுவிட்டது’’ என்றார். அச்சப்படுவதற்குகூட தனக்கு நேரம் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடும் ரெய்னர் சிம்ஃப் இதனால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை.

உடனடியாகக் கப்பலுக்கு வந்து கேமராவுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்றும் தனக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா என்றும் சோதித்துப் பார்த்துவிட்டு மீண்டும் கடலினுள் படம்பிடிக்கச் சென்றிருக்கிறார். இந்த நிகழ்வை நினைவு கூறி அடுத்த பிறவியில் ஒரு திமிங்கிலமாகப் பிறக்க வேண்டும் என்ற விநோத ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு முழுவதையும் படகில் இருந்துகொண்டே அச்சத்துடன் பார்த்திருக்கிறார் இவர் மனைவியும் சக புகைப்படக்கலைஞருமான சில்க். 5 ஆண்டுகளுக்கு முன் இவர் சென்ற படகை ராட்சத வெள்ளை சுறா ஒன்று தாக்கியது. ஆனால், அப்போதும் எதுவும் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. கடல்வாழ் உயிரினங்களிடம் இவருக்கு ஏதோ அதிர்ஷ்டம் இருக்கும்போல!

 

இந்த பிரிட்ஸ் திமிங்கிலங்கள் 30 டன் வரை எடை கொண்டது. இருப்பினும் மனிதனை விழுங்கும் அளவுக்கு இவற்றின் தொண்டை தெரியதல்ல, வாயை முழுவதுமாக திறந்துவருவதால் முன்னிருப்பதையும் அது பார்த்திருக்காது, எனவேதான் தன்னை விழுங்கிய அந்த திமிங்கிலம் உடனுக்குடன் தன்னை வெளியே உமிழ்ந்திருக்கிறது என்கிறார் சிம்ஃப். மற்ற வல்லுநர்களும் இது விபத்தாகத்தான் நடந்திருக்க முடியும் எனக் கூறுகின்றனர். இந்த நிகழ்வைப் படகில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த நிகழ்வு நெட்டிசன்கள் உட்பட பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இப்போது இந்தப் படம் வைரல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க