மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு

Patna

oi-Velmurugan P

|

பாட்னா: இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகர் அனுராக் காஷ்யப் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜுலை மாதம் கடிதம் எழுதினர்.

சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் எழுதிய கும்பல் வன்முறைக்கு எதிரான கடிதம் பாஜகவுக்கு எதிராக அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பீகார் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பீகார் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது.

மத உணர்வை புண்படுத்துதல்

இதையடுத்து இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்

பிரபலங்கள் கண்டனம்

இந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் திரையுலகப் பிரபலங்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் மீது வழக்கு

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்ததையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே புகார் அளித்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா மீது காவல்துறை வழக்குத் தொடரும் என்று பீகார் மூத்த போலீஸ் அதிகாரி மனோஜ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed