பெரிய திரையில் டோரா புஜ்ஜியின் பயணங்கள்! ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (22/03/2019)

கடைசி தொடர்பு:18:35 (22/03/2019)

`டோரா தி எக்ஸ்ப்ளோரர் அல்லது `டோராவின் பயணங்கள் என்று சொன்னவுடனேயே 90ஸ் கிட்ஸுக்கு ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி வந்துவிடும். பேக்பாக், மேப் மட்டுமல்லாமல் தன் செல்லக் குரங்கு நண்பனான புஜ்ஜியையும் (ஆங்கிலத்தில் `பூட்ஸ்) அழைத்துக்கொண்டு டோரா பயணப்படாத இடமே உலகத்தில் இல்லை. ஒவ்வொரு 90ஸ் கிட்டின் பள்ளிக்காலத்திலும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ், கணிதம், வடிவங்கள், உருவங்கள், ஒப்பீட்டு அளவுகள் என டோரா எல்லா சப்ஜெக்டையும் சொல்லித் தந்திருக்கிறாள்.

இதுவரை, கார்ட்டூன் வடிவத்தில் மட்டுமே நிக்கலோடியன் சேனலில் ஆங்கிலத்திலும், சுட்டி டி.வியில் தமிழிலும் வெளியாகிக் கொண்டிருந்த `டோராவின் பயணங்கள் இம்முறை திரையரங்குக்கு, ஒரு முழு நீள சினிமாவாக வரவிருக்கிறது. கார்ட்டூன் வெர்ஷனில் தொடக்கப் பள்ளிக் குழந்தையாக இருக்கும் டோரா இந்தப் படத்தில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்கிறாள். அதே வேளையில், அவளுடைய சாகசப் பயணங்களும் தொடரப்போகின்றன.

`டோராவும் தொலைந்து போன தங்க நகரமும் (ஆங்கிலத்தில் `டோரா அண்ட் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்டு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அனிமேஷனாக அல்லாமல், ஒரு லைவ் ஆக்‌ஷன் படமாகத்தான் இருக்கும். இரண்டு ஆண்டுகளாக புரோடக்ஷனில் இருந்த இந்தப் படம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாபின் இயக்கும் இந்தப் படத்தில் இசபெல்லா மோனர் டோராவாக நடிக்கிறார். லைவ் ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், புஜ்ஜி (பூட்ஸ்), குள்ள நரி (ஸ்வைப்பர் தி ஃபாக்ஸ்), டீயகோ போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாமே இந்தப் படத்திலும் இடம்பெறும் எனப் படக்குழு கூறியுள்ளது. தொலைந்து போன தன் பெற்றோர்களைத் தேடிச் செல்லும் டோரா, மறக்கப்பட்ட இன்கா நாகரிகத்தின் தொலைந்த தங்க நகரத்தையும் இந்தப் படத்தில் கண்டுபிடிப்பதுதான் கதைக்களம். மேலும், கார்ட்டூன் வடிவத்தைப் போலச் சிறுபிள்ளைத் தனமாக இல்லாமல், கொஞ்சம் எல்லா வயதுக்காரர்களையும் கவரும் வண்ணம் இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க