`2050ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்!’ ஓர் எச்சரிக்கை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது பிளாஸ்டிக். தேவைக்கதிகமாகப் பயன்படுத்தும்போது இதனால் ஏற்படும் விளைவுகளும் விபரீதங்களும் ஏராளம். பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் தூக்கியெறியப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, அது நமக்கும் பேராபத்தை உருவாக்கும். இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அணு ஆயுதத்தைவிடக் கொடியது பிளாஸ்டிக். 

இன்று (5.6.2018) உலகச் சுற்றுச்சூழல் தினம். பிளாஸ்டிக் மாசு விழிப்புஉணர்வுக்காக `பீட் பிளாஸ்டிக் பொல்யூஷன்’ (BeatPlasticPollution) என்ற வாசகத்தை ஹேஷ்டேக்காக வைத்திருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இந்த நாளில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் குறித்தும் உலகளவில் பிளாஸ்டிக் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் பார்க்கலாம். 

`உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்குச் சுமார் 80 லட்சம் டன் வீதம், இதுவரை சுமார் 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ((National University of Singapore) ஆராய்ச்சியாளர்கள். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒரு லாரி பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இவை கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஐந்து இடங்களில் மிகப் பெரிய குப்பைத் தீவுகளாக மிதந்துகொண்டிருக்கின்றன. `இப்படித் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தால், 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களைவிட பிளாஸ்டிக் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். அவை மீன்களின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத்துவிடும்’ என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். 

`உலகம் முழுவதும் மனிதர்களுக்கு மிக முக்கிய உணவாக இருப்பது மீன். சிறிய மீன்கள் உண்ணும் உணவுகளில் பிளாஸ்டிக் பொருள்களும் அடக்கம். சில வகை பிளாஸ்டிக்குகள் மட்டும் செரிமானமாகிவிடும். அப்படிச் செரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கிலிருக்கும் வேதிப்பொருள்கள் அதன் உடலில் கலந்துவிடும். இந்தச் சிறிய மீன்களை உண்ணும் பெரிய மீன்களுக்கு பிளாஸ்டிக் கடத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வேதிப் பொருள்களால் பாதிக்கப்பட்ட மீனை நாம் சாப்பிடும்போது, பாதிப்புக்கு ஆளாகிறோம்’ என்று திடுக்கிடவைக்கிறார்கள் `நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்’ ஆய்வாளர்கள். 

ஒரு சதுர மீட்டர் கடல்நீரில் சுமார் 25,000 `மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் (ஒரு மைக்ரோ மீட்டர் என்பது ஒரு சென்டிமீட்டரில் 10,000-ல் ஒரு பகுதி, ஒரு நானோ என்பது ஒரு சென்டிமீட்டரில் 1,00,00,000-ல் ஒரு பகுதி) துகள்கள் இருப்பதாக கனடாவின், வான்கூவர் அக்வேரியம் ஓஷியன் பொல்யூஷன் ரிசர்ச் புரோகிராம் (Vancouver Aquarium Ocean Pollution Research Program) என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில், எட்டு நாடுகளின் கடல்நீரிலிருந்து எடுக்கப்பட்ட உப்பில், அதற்குத் தொடர்பில்லாத 72 துகள்கள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 30 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள், 17 வண்ணப் பொருள்கள், 4 தூசுகள், 21 துகள்கள் ஆகியவை என்னவென்றே அறிய முடியவில்லை.

நானோ பிளாஸ்டிக் துகள்கள் கடல்வாழ் உயிரினங்களின் `லார்வாக்களின்’ ரத்தநாளங்களுக்குள் செல்லுமளவுக்குச் சிறியவை. இதை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை உயிரினங்களின் செல் சுவர் (Cell Wall) துவாரங்களுக்குள் செல்லும். கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக், ஆர்டிக் கடல் பகுதிகளிலும் குவிந்துகிடக்கின்றன.
தி ஆல்ஃபிரட் வீகனர் இன்ஸ்டிட்யூட் (The Alfred wegener Institute) என்ற ஜெர்மனி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பனிப்பாறைகளில் ஐந்து இடங்களில் நடத்திய ஆய்வில், ஒரு லிட்டர் ஐஸ் கட்டியில் சுமார் 12,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். `மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் அதன் கழிவுகளால் ஆர்டிக் பனிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அங்கு வாழும் அரிய உயிரினங்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன’ என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில்தான், ‘உலகின் பெரிய நிறுவனங்களால் தயாரித்து, விற்பனை செய்யப்படும் 90 சதவிகித வாட்டர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன’ என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, லெபனான், கென்யா, தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளில், 19 இடங்களில் சேகரிக்கப்பட்ட 259 மினரல் வாட்டர் பாட்டில்களை உலகச் சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. அவற்றில், சராசரியாக ஒரு பாட்டிலில் 325 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. 17 பாட்டில்களில் மட்டும் பிளாஸ்டிக் துகள்கள் இல்லை. ஒரு பாட்டிலில் மட்டும் அதிகப்பட்சமாக 10,000 துகள்கள் இருந்திருக்கின்றன. 

ஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களான தண்ணீர் பாட்டில், குளிர்பானப் பாட்டில்கள், கப், கவர் போன்றவைதான் மிக முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துபவை. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்தாமல், தூக்கி வீசுவதால்தான் இந்தப் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள் தெரியாமல், சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் வைத்துச் சாப்பிடுகிறோம். ஆவியில் வேகவைப்படும் இட்லியை, பிளாஸ்டிக் கப்களில் வைத்து அவிக்கிறார்கள். உணவகங்களில் விற்கப்படும் டீ, காபி, குழம்பு, ரசம் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கட்டித் தருகிறார்கள். `பிளாஸ்டிக் பைகளில் கட்டித்தரப்படும் சூடான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் `பிளாஸ்டிக் கழிவுகள்’ குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நக்கீரனிடம் பேசினோம்... ``நிலத்தைவிட நீரில்தான் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. கடலில் அதன் பாதிப்பு மிக அதிகம். கடல், ஆறுகளில் மிதக்கும் `ஃபைட்டோபிளாங்டன்’ (Phytoplankton) என்ற சிறு உயிர்கள் உணவுச் சங்கிலியில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை கடலோரத்தின் கழிமுகப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படும். கடல்வாழ் உயிரினங்களான மீன் குஞ்சுகள், லார்வாக்களுக்கு இவைதான் ஆதார உணவு. இப்போது, ஃபைட்டோபிளாங்டனின் விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதால் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 

முன்னர் நீரில், ஆறு ஃபைட்டோபிளாங்டன்கள் இருந்தால், ஒரு நானோ பிளாஸ்டிக் துகள் இருக்கும். இப்போது, ஒரு ஃபைட்டோபிளாங்டன், எட்டு நானோ பிளாஸ்டிக் துகள்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது.

மனிதன் உயிர்வாழ ஆக்சிஜன் மிக முக்கியம். இந்த ஆக்சிஜன் மழைக்காடுகளிலிருந்து 28 சதவிகிதமும், கடல் நுண்ணுயிர்களிலிருந்து 70 சதவிகிதமும், மற்ற வழிகளில் இரண்டு சதவிகிதமும் கிடைக்கும். கடலிலிருந்து கிடைக்கும் 70 சதவிகித ஆக்சிஜன், `பிளாங்டன்’ (Plankton) நுண்ணுயிர்களின் மூலமே பெறப்படுகிறது. இந்த நுண்ணுயிர்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஃபைட்டோபிளாங்டன் நுண்ணுயிர்கள் மிக முக்கியமானவை. இவை நானோ பிளாஸ்டிக்கால் அதிகளவில் அழிந்துவருகின்றன. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

நாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக் பொருள்கள், கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஜப்பான், அமெரிக்கா நாடுகளுக்கு நடுவிலிருக்கும் பசுபிக் பெருங்கடலில் மிகப் பெரிய இரண்டு பிளாஸ்டிக் தீவுகளை உருவாக்கியிருக்கின்றன. இவற்றின் பரப்பளவு, தமிழ்நாட்டைப்போல 10 மடங்கு பெரியது. இதேபோன்ற, பிளாஸ்டிக் தீவு அட்லான்டிக் பெருங்கடலிலும் உண்டு. சிதைந்துபோன சிறிய பிளாஸ்டிக் துகள்கள், பெரிய பிளாஸ்டிக் பொருள்கள்தாம்  இந்தத் தீவுகள் உருவாகக் காரணம். கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கில் 70 சதவிகிதம் கடலின் அடிமட்டத்திலிருக்கும் சேற்றில் புதைந்துவிடும். எஞ்சியவையே ஒன்றுசேர்ந்து தீவுகளாக மாறியிருக்கின்றன. பிளாஸ்டிக் தீவு பகுதிகளில் கப்பல் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

மினரல் வாட்டர் பாட்டிலின் தண்ணீரைக் குடிக்காமல் மூன்று மாதங்கள் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் பிளாஸ்டிக்கின் பிஸ்ஃபினால் ஏ (Bisphenol A), ஆன்டிமோனி (Antemony) போன்ற வேதிப்பொருள்கள் கலந்துவிடும். இவற்றைக் குடிப்பவர்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன. வாட்டர் பாட்டில்களை வெயிலில் வைத்தாலும், ஃபிரிட்ஜில் வைத்தாலும் இந்த வேதிப்பொருள்கள் நீரில் கலந்துவிடும். 

விழிப்புஉணர்வு இல்லாததால்தான் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்துவிட்டு, துணிப் பைகளைப் பயன்படுத்தலாம். பெரிய உணவகங்களிலும்கூட பிளாஸ்டிக் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது. இப்படி பிளாஸ்டிக்கை அதிகமாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தால், உலகம் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரிக்கிறார் நக்கீரன்.

பிளாஸ்டிக்கால் ஏற்படும் நோய்கள், பிளாஸ்டிக்கைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். ``பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உணவுகளில் கலப்பதால், பல நோய்கள் உண்டாகும். பிளாஸ்டிக்கில் இருக்கும் `ஸ்டைரென்’ (Styrene), `பிஸ்ஃபினால் ஏ’ (Bisphenol A, Lead to cancer) போன்ற விஷத் தன்மையுள்ள வேதிப்பொருள்களால் இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு (Reproductive Problems), ஹார்மோன் குறைபாடு (Endocrine Disruptors), புற்றுநோய் போன்றவை ஏற்படும். 

பிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அண்மையில், கல்பாக்கம் கடற்கரையில் இறந்துபோன நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. அதைப் பரிசோதித்ததில், அதன் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல, உலகம் முழுக்க லட்சக்கணக்கான அரிய கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்குக்குப் பலியாகின்றன. பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை நிறுத்தி, பயன்பாட்டைக் குறைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக எளிதில் மட்கும் பொருள்களைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தலாம். மக்களும் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, அதன் பயன்பாட்டை மெள்ள மெள்ளக் குறைக்க வேண்டும். இதுவே சரியான தீர்வாக இருக்கும்’’ என்கிறார் புகழேந்தி.

மனித இனத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது பிளாஸ்டிக். பூமியை பிளாஸ்டிக் கழிவுகளால் நிரப்பிக்கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், வேறு கிரகங்களை நாடிச் செல்வதைவிட வேறு வழியில்லை. ஆனால், அவையெல்லாம் உடனடி சாத்தியமில்லாதவை. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி இந்தப் பொன்னுலகைக் காக்க முயல்வோம்!