ஓர் ஊரில் ஒரு மரியே பாட்டி... இவருக்கும் தாய்மொழி தினத்துக்கும் என்ன சம்பந்தம்!

Chennai: 

ரியே ஸ்மித் ஜோனெஸ்(Marie Smith Jones)... இவர் கடந்த 2008 ம் ஆண்டு ஜனவரி 21 ம் தேதி இறந்துவிட்டார். இதனைக் கேள்விப்பட்ட மக்கள் பலர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுவரை மரியே ஸ்மித் ஜோனெஸைப் பார்த்திடாத மக்களும் கண்ணீர் வடித்தனர். யார் இவர்? அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஒரு பழங்குடி இனத்தினைச் சேர்ந்த பாட்டிதான் மரியே ஸ்மித். 89 வது வயதில் மரியா இறந்தபோது அதுவரையிலும் அவரை நேரில் பார்த்திராத மக்களும்கூட கண்ணீர் வடித்ததற்கு என்ன காரணம்? இந்தப் பாட்டி சில பழங்குடி மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். ஆனால், மக்கள் கண்ணீர் சிந்தியதற்குக் காரணம் அதுவல்ல.... அலாஸ்கா பழங்குடி மொழிகளுள் ஒன்றான ஏயக் மொழியைப் பேசத்தெரிந்த உலகின் கடைசி நபராக அந்தப் பாட்டி இருந்ததே அத்தனை மக்களின் கண்ணீருக்கும் காரணம். ஆம்... அவரோடு சேர்ந்து ஏயக் என்ற மொழியும் அழிந்துவிட்டது. இப்போது ஏயக் மொழியைப் பேசத்தெரிந்த நபர்கள் யாரும் உலகத்தில் இல்லை. 

அந்தப் பாட்டிக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். ஆனால், அவர்கள் அனைவருமே அந்த மொழியைத் தெரிந்துவைத்துக்கொள்ளவில்லை. வேலைக்காகவும், நாகரிகத்துக்காகவும், இன்னபிற தேவைகளுக்காகவும் ஆங்கிலத்தைக் கற்கவேண்டிய சூழலில் அவர்கள் இருந்தனர். மரியே பாட்டியின் சகோதரி ஒருவர் இருந்தார். அவர் 90-களின் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு மரியே பாட்டி யாருடனும் பேசுவதில்லை. இல்லை... இல்லை... மரியே பாட்டியுடன் உரையாடுவதற்கு யாருக்குமே ஏயக் மொழி தெரிந்திருக்கவில்லை. மரியா பாட்டி இறந்ததால், அவருடன் சேர்ந்து ஏயக் என்ற ஒரு மொழி அழிந்துபோனது. ஒரு மொழி அழிந்துபோனதால், அந்தப் பழங்குடி மக்களின் பண்பாடும் அம்மக்களைப் பற்றிய மொத்த வரலாறும் இருந்த இடம் தெரியாமல் மண்ணில் புதைக்கப்பட்டுவிட்டது. இன்று உலக தாய்மொழி தினம் (பிப்ரவரி 21). அதனால் மக்களுக்கு ஏயக் மொழி பற்றியும், மரியா பாட்டியைப் பற்றியும் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

மரியே ஸ்மித் ஜோனெஸ்

ஒரு மொழி கண்ணெதிரே அழிந்துவிட்டது. உலகின் பல மூத்த மொழிகளும் கண்ணேதிரே அழிந்து வருகின்றன. மனித இனப் பரிணாம வளர்ச்சியின் மையப்புள்ளியே மொழிதான். உலகில் இன்றிருக்கும் மொழிகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான மொழிகளை பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களே பேசி வருகின்றனர். பலநூறு மொழிகளை மிக சொற்பமானவர்களே பேசிவருகின்றனர். ஒரு மொழி அழியாமல் இருக்க வேண்டுமானால், குறைந்தது பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களாவது பேசியும், எழுதியும் வர வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழ் மொழி என்பது நிச்சயம் அழியாது என்று நினைக்கலாம். காரணம் உலகம் முழுவதும் சுமார் 8.5 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியிருக்க தமிழுக்கு என்ன நேரப்போகிறது?

பிறமொழி கலப்பு என்பது எப்போது ஒரு மொழிக்குள் ஊடுருவுகிறதோ... அப்போதே அந்த மொழி அழிவுப் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது. அதுவும் ஆங்கிலம் வந்தபின்பு பல மொழிகள் காணாமல் போய்விட்டன. இப்போது வரை உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆங்கிலம் பேசி வருகிறார்கள். அடுத்த மிகச்சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 200 கோடி மக்களைக் கடந்து 300 கோடி மக்களை நோக்கிப் பயணிக்கும். கணினி, அறிவியல் வளர்ச்சி, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலத்தின் வேர்கள் ஆழமாகப் பரவிவிட்டன. பிறமொழிகளைக் கற்பது தவறல்ல... ஆனால், தாய்மொழியைக் கற்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு. ஜப்பான், ரஷ்யா, சீனா, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் தாய் மொழியிலேயே உயர் படிப்பு படித்துவருகிறார்கள்; ஆராய்ச்சிகளும் செய்துவருகிறார்கள். மக்களுக்குத் தாய்மொழி கல்வியைச் சிறப்பாகத் தராத எந்தவொரு நாடும் வளர்ச்சியில் பின்தங்கியே இருக்கும். 

தாய்மொழி தினம் வரலாறு :

கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசம், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டம் அது. அப்போது இருநாட்டுக்கும் இடையே மொழி பிரச்னை உருவாகியது. இதனால் 1952 ம் ஆண்டு பிப்ரவரி 21 ம் தேதி கிழக்கு பாகிஸ்தானில் மாணவர்கள் புரட்சி வெடித்தது. புரட்சியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. இதனால் பல மாணவர்கள் இறந்தனர். பாகிஸ்தான்-வங்கதேசம் என்ற இரு நாடுகள் பிரிய இந்த மொழிப்போரே முக்கியக் காரணமாக அமைந்தது. அதன்பின்னர் கனடா நாட்டில் வசித்து வந்த வங்காளி ரஃபிகுல் இஸ்லாம் என்பவர் 1998 ம் ஆண்டு அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் கோஃபி அன்னானுக்கு எழுதிய கடிதத்தின் விளைவாகவே தாய்மொழி தினம் உருவாக்கப்பட்டது. முதன் முதலில் 2008 ம் ஆண்டு, சர்வதேச தாய்மொழி தினம் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டது. அதன்பின்பு ஒவ்வொரு பிப்ரவரி 21 ம் தேதியும் உலகநாடுகளால் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்மொழி தேர்ச்சிகொள்..!