சுற்றுலாத்தலமாகுமா பென்னிகுவிக் மணிமண்டபம் நிறைவேறுமா தேனி மக்களின் ஆசை

வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (10/03/2019)

கடைசி தொடர்பு:19:33 (10/03/2019)

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம். இதனைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்பது தேனி மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது அம்மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் நீண்ட நாள் கனவாகவும் இருக்கிறது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது, முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம். இதனைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்பது தேனி மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது அம்மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் நீண்ட நாள் கனவாகவும் இருக்கிறது.

அறிக்கை கேட்ட ஆணையரகம் :

கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பாகக் கடந்த வாரம், மாநில சுற்றுலா ஆணையரகம், மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் எழுதி அறிக்கை ஒன்றைக் கேட்டது. அதில், பென்னிகுவிக் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து, விரிவான அறிக்கையை அனுப்புமாறு தேனி மாவட்ட சுற்றுலா அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தேனி மாவட்டச் செயலாளர் திருப்பதி வாசகன், “லோயர்கேம்பில் அமைந்துள்ள பென்னிகுவிக்கின் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றினால் தமிழக மக்களுக்கு முல்லைப்பெரியாறு அணையின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தினால், இந்தியா முழுவதிலுமிருந்து தேக்கடி, குமுளி செல்லும் சுற்றுலாப்பயணிகளை பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு நம்மால் எளிதாக ஈர்க்க முடியும்.

இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு வருமானமும் கிடைக்கும். தேனிக்கு வரும் விவசாய சங்கங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பென்னிகுவிக் மணிமண்டபத்திற்குச் சென்று பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுச் செல்வது இன்றுவரை தொடர்ந்துவருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பென்னிகுவிக் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சுற்றுலாத் துறை அதிகாரிகள், “பென்னிகுவிக் மணிமண்டபம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மணிமண்டபம் கட்டப்பட்டபோது சுற்றுலாத் துறை சார்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதனை முறையாகப் பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித் துறையிடமே உள்ளது. தற்போது சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக என்ன மாதிரியான ஏற்பாடுகளை பென்னிகுவிக் மணிமண்டபத்தில் செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டுக்கொண்டிருக்கிறது” என்றனர்.

ஏன் சுற்றுலாத்தலமாக்க வேண்டும்?

மதுரை, தேனி. திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை. இதனைக் கட்டியவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இவரை ஐந்து மாவட்ட மக்கள் கடவுளாகப் பாவித்து இன்றுவரை வணங்கிவருகிறார்கள். பொங்கலன்று வரும் இவரது பிறந்தநாளை, ’பென்னிகுவிக் பொங்கல்’ எனக் கொண்டாடி மகிழ்கிறார்கள். கடந்த 2013-ம் ஆண்டு, 2,500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் வெங்கல உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதனைத் திறந்துவைத்தார்.

இந்த மணிமண்டபத்தில், முல்லைப்பெரியாறு அணை கட்டப்படும்போது எடுக்கப்பட்ட அரிய பல புகைப்படங்கள் மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நேர்த்தியான சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்போது, முல்லைப்பெரியாறு அணையின் வரலாற்றையும், அதன் தேவையையும் சுற்றுலாப்பயணிகள் உணர்ந்துகொள்வார்கள். விரைவில் பென்னிகுவிக் மணிமண்டபத்தைச் தேனி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து அதனைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது. குறிப்பாகத் தேனி மாவட்ட மக்களின் ஆசையாகவும் உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க